மொழி நிறுவுநர் காண்டீபனுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அதியுயர் விருது

Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
  • User AvatarMozhi
  • 10 Nov, 2024
  • 0 Comments
  • 10 Secs Read

மொழி நிறுவுநர் காண்டீபனுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அதியுயர் விருது

உலகின் முதன்மையான பல்கலைக்கழகமான அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், 2024 -ஆம் ஆண்டுக்கான “சிறந்த தன்னார்வ தலைமைத்துவ விருதினை” பாலேந்திரன் காண்டீபனுக்கு வழங்கி கௌரவித்துள்ளது. 1636-ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் தொன்மைச்சிறப்புடைய பல்கலைக்கழகம் ஆகும். அத்துடன், இன்றுவரை உலகின் மிகச்சிறந்த ஆய்வாளர்கள், தலைவர்கள், விற்பன்னர்களை உருவாக்கி அதன் மூலம் சமூகமாற்றத்தை ஏற்படுத்தி வருகின்ற, உலகின் முதன்மைப் பல்கலைக்கழகமாகவும் பல நூற்றாண்டுகளாக திகழ்ந்து வருகின்றது. சமூக முன்னேற்றத்துக்காக காண்டீபன் ஆற்றிய உன்னத சேவைக்காகவும் அதற்கான அவரது அர்ப்பணிப்புக்காகவும் இந்த கௌரவத்தை அப்பல்கலைக்கழகம் அளித்துள்ளது.

காண்டீபனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது  இலங்கை மற்றும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புலமைத்துவம் மற்றும் சமூக வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணியையும் பிரதிபலிப்பதுடன், உலகளாவிய ஹார்வர்ட் சமூகத்தில் அவர் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ பழைய மாணவர் சங்கமான ’ Harvard Club of Sri Lanka’ ஆனது, உலகின் 119-ஆவது ஹார்வர்ட் சங்கமாக இலங்கையில் 2021-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்மூலம் உலகளாவிய ரீதியில் புலமைத்துவம் மற்றும் தொழில்துறை சார் மதிப்பு வாய்ந்த ஹார்வர்ட் வலையமைப்புக்குள் இலங்கையும் இணைந்து கொண்டது. இந்த சங்கத்தின் நிறுவுநர் மற்றும் நிர்வாக சபைத்தலைவர் என்ற வகையில், தலைமைத்துவம் – சிறப்புநிலை – சேவை முதலானவற்றின் பெறுமதிகளை முன்னிறுத்திய காண்டீபன், பல புதிய முன்னெடுப்புகளை ஆரம்பித்து வைத்தார். இவ்வாண்டில் அவர் தலைமையேற்று நடாத்திய BIG BOLD BRAVE – Harvard ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டில், 15க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பல்துறை விற்பன்னர்கள் பங்கேற்றமை, சர்வதேச தளத்தில் இந்நிகழ்வினைப் பேசுபொருளாக்கியது.

இலங்கை ஹார்வர்ட் சங்க உறுப்பினர்களின் துணையுடன், கொரோனா பெருந்தொற்று காலத்தில், #SaveLivesSriLanka என்னும் சுகாதார முன்னெடுப்பினை பாலேந்திரன் காண்டீபன் ஆரம்பித்திருந்தமை அக்காலப்பகுதியில் பாரிய முக்கியத்துவம் பெற்றது. இம்முன்னெடுப்பினால் 15 பொதுமருத்துவமனைகளுக்கு அண்ணளவாக 5 கோடி ரூபாய் பெறுமதியான அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டிருந்தமை, பல உயிர்களைப் பாதுகாக்கவும் நோயாளர்களைக் குணமாக்கவும் காரணமாகியிருந்தது.

தற்போது இலங்கையின் குறிப்பிடத்தக்க வெற்றிகரமான தொழில்முனைவோர்களில் ஒருவராக உள்ள காண்டீபன், தமது ஊடகவாழ்க்கையில் கப்பிட்டல் மகாராஜா குழுமத்தில் தலைமை நிறைவேற்று அதிகாரி மற்றும் பணிப்பாளர் பதவிகளை வகித்தமை மட்டுமன்றி, ஊடகத்துறையில் பெரும் சாதனைகளை தனது இளம்வயதிலேயே படைத்திருந்தார். சக்தி ஊடகத்தில் தலைமை அதிகாரியாகப் பதவிவகித்த காண்டீபனால், நடாத்தப்பட்ட “மகா இலட்சாதிபதி” நிகழ்ச்சி இலங்கை தமிழ்த்தொலைக்காட்சி வரலாற்றில் மக்களின் பாரிய வரவேற்பைப்பெற்றது. தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக 250 அங்கங்களையும் தாண்டி ஒளிபரப்பப்பட்ட சிறப்பும் கொண்ட இந்த நிகழ்ச்சியும் அவர் நேர்காணல் செய்து நடத்திய சமூக-அரசியல் நிகழ்ச்சியான ‘மின்னலும்’ பாலேந்திரன் காண்டீபனின் தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவத்திறன்களை உலகறியச் செய்திருந்தன. அவரின் தயாரிப்பில் உருவான சூரியன் பண்பலை வானொலியில், ‘ஆராய்ச்சிமணி’, சக்தி பண்பலை வானொலியில் ‘மக்கள் சக்தி’ முதலான நிகழ்ச்சிகள், இலங்கை ஊடக வரலாற்றில் மக்கள் குரலாக ஒலித்தன. அவை அக்காலத்தில் மிகப்பெரும் சமூகத்தாக்கத்தையும் மாற்றங்களையும் ஏற்படுத்திய நிகழ்ச்சிகளாக இருந்தன.

ஊடகத்துறையிலிருந்து ஒரு தொழில்முனைவோராகவும் கல்வியாளராகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்ட காண்டீபன், தமிழ்ப்பண்பாட்டில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதன் மூலம், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான பீடத்தை ஏற்படுத்த முனைந்த தமிழ் ஆர்வலர்களின் தலைமைக் குழுவின் அங்கத்தவரான காண்டீபன், அந்த முயற்சியில் வெற்றியும் கண்டார். உலகின் பல நாடுகளிலும் வாழ்கின்ற தமிழ்பேசும் மக்களை இந்த நோக்கத்திற்காக ஒன்றிணைத்து நிதி திரட்டப்பட்டது. அதன் விளைவாக, இன்று, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டதுடன், அதன் பேராசிரியராக சங்கத்தமிழ் ஆய்வு வல்லுநர் பேராசிரியர் மார்த்தாவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாமல், 400 ஆண்டுகளுக்கு மேலான ஹார்வர்ட் பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக, தமிழியல் சார்ந்த கலாநிதிப்பட்ட ஆய்வொன்று தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.

2014 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ‘19 இளம் உலகத்தலைவர்கள்’ பட்டியலில் காண்டீபனின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தமை அவரது ஆற்றலுக்கான சர்வதேச அங்கீகாரமாக அமைந்தது. அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள விக்டோரியா பல்கலைக்கழகம் அவருக்கு ’இளம் சாதனையாளர் விருதையும்’ வழங்கியது. அவுஸ்திரேலியாவின் வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணைக்குழு காண்டீபனுக்கு தலைமைத்துவ விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது. உலகின் சிறந்த விளம்பர மற்றும் ஊடக உருவாக்கத்தினை வெளிப்படுத்தும் நியூயோர்க் விழாவின், ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்பட்ட ஒரே இலங்கையர் என்ற பெருமையும் இவரை வந்தடைந்தது.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழையமாணவரான காண்டீபன், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் Executive MBA/PLDA பட்டக் கற்கையையும் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் MBA பட்டக் கற்கையையும் நிறைவு செய்துள்ளார். காண்டீபனால் ஸ்தாபிக்கப்பட்ட அக்கடமிக்ஸ் குழுமம், Miami Ad School, Ivy Future Leader Academy, மொழி அமைப்பு (www.mozhi.com) ஆகியவற்றுடன் EMBRAX Innovations நிறுவனத்தையும் உள்ளடக்கி, சிறப்புற இயங்கி வருகின்றது. இந்நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் காண்டீபனுக்கு வழங்கப்பட்ட இந்த அதியுயர் விருது, உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்களையும் பெருமைப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X