மகாகவியும் மக்களும்: சில சிந்தனைகள்
– ஆதித்தன்
புதுமை, வேகம், மற்றும் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தில் நவீன உலகம் இருக்கின்றது. எனினும், தமிழ்பேசும் சமூகத்தின் இளம் தலைமுறையினர் மத்தியிலும் பாரதியின் சொற்கள் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. தமது மகிழ்வுத் தருணங்களையும் சோகத்தருணங்களையும் வெளிப்படுத்துவதற்கு பாரதியின் வார்த்தைகளை சமூக வலைத்தளங்களில் அவர்கள் பயன்படுத்துகின்றனர். காதலின் இனிய பொழுதுகளில் திளைப்பதற்கும் அதன் துயர்ப்பரப்புகளில் இளைப்பாறுவதற்கும் பாரதியின் கவிச்சொற்கள் துணைசெய்கின்றன.
வீறு கொண்டு எழுகின்ற வாழ்க்கையின் ஏற்றம் மிகு பாதையைக் காண்பதற்கும், வீழ்ச்சி மிக்க வேளைகளில் மனதை ஆற்றுப்படுத்தவும் கூற பாரதியாரின் வார்த்தைகளே தோள்கொடுக்கின்றன. எந்தக் காலத்து இளைஞர்களின் வாழ்க்கையிலும் பாரதியின் படைப்புகள் தாக்கம் செலுத்திய வண்ணமே இருக்கும் என்பதை நாம் கண்ட வண்ணமே இருக்கின்றோம்.
சுதந்திரம், சமூக நீதி, பெண்ணியம், கல்வி, அறிவியல் ஆகிய துறைகளில் முன்னோடிச் சிந்தனைகளை பாரதியார் வெளிப்படுத்தியிருந்தார். இளைஞர்கள் ஊக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். எத்துறையிலாவது எத்தளத்திலாவது தொடர்ச்சியான இயக்கம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை அவரது சொற்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சோம்பிக் கிடப்பதையும் பலம் இழந்து கிடப்பதையும் பாரதியார் நிந்தனை செய்தார் என்பதை, அவர் தம் படைப்புகளில் ஆழ்ந்துணர்ந்தவர்கள் அறிவர்.
தொடர்ச்சியான இயக்கமே சமுதாயத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். மனித மனத்தை சிறுவயதில் இருந்தே தேக்க நிலைகளுக்குள் தள்ளி விடுகின்ற மூட நம்பிக்கைகளை அவர் கண்டிப்பதை, சின்னப் பிள்ளைகளுக்காக அவர் எழுதிய பாடல்களில் இருந்து அறிய முடியும். அவரது படைப்புகள் மனித மனத்தை தம் வசம் ஈர்த்தெடுத்து, அதில் படிந்திருக்கும் மாசுகளைக் களைந்து தூயதாக்கி சமுதாய முன்னேற்றம் என்னும் விதையை விதைக்க வல்லன.
இன்றைய இளம் சமுதாயம் மரபுகளைக் கைவிடுகின்றது என்று வெளிப்படும் சில புலம்பல்கள் பொய்யாகப் போகும் வண்ணம், இன்றும் இளைஞர்களால் பாரதி தூக்கிக் கொண்டாடப்படுகின்றார். அது பெரு மகிழ்ச்சிக்குரியது.
தமிழ் இலக்கியப் பரப்பில் பாரதியின் பங்களிப்பு குறித்து ஏராளம் ஏராளம் பேசப்பட்டாயிற்று. தமிழ்ச்சமூகத்தின் பல்வேறுபட்ட தளங்களிலும் அவருடைய உந்துசக்தி எவ்வாறு பங்களித்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
இன்று சுப்பிரமணிய பாரதியாரின் 141 ஆவது பிறந்த நாள்.
அவரது கனவு மெய்ப்பட வேண்டும்.