நேர்மையாக வாழ்வோம்!!
-சஸ்மிதா இளஞ்செழியன்-
நம் வாழ்க்கை எவ்வளவு மேடு பள்ளங்களேடு பயணித்தாலும், நாம் என்றுமே ஒரு விடயத்தை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்வது அவசியம். நாம் யாராக இருந்தாலும் எவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் நேர்மை என்பது எமது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒரு குணாதிசயமாகும். நேர்மை இல்லாத வாழ்க்கை நன்றாக தான் இருக்கும். ஆனால், ஒரு நாள் திரும்பிப் பார்க்கும்போது, நம்மை நம்பி நம்மோடு பயணிக்க ஒருவருமே இருக்க மாட்டார்கள்.
ஒரு பெரிய நிறுவனத்தில் பலர் வேலை செய்துக் கொண்டிருந்தனர். அந்த நிறுவனத்தின் தலைவருக்கு வயதாகிய காரணத்தால் அவரின் பின் அந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்ய திறமையுள்ள ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என நினைக்கிறார். நிறுவனத்தில் உள்ள அனைவரையும் அவரது அறைக்கு வரவைத்து ஒவ்வொருவர் கையிலும் ஒரு விதையை கொடுக்கிறார். ” இதை உங்கள் வீட்டில் மண் தொட்டியில் நட்டு உரம் இட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து கொள்ளுங்கள், நான் சொல்லும் பொழுது கொண்டு வந்தால் போதும்” என்று கூறி ஆளுக்கொரு விதையை கொடுத்தார்.
நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் அந்த நிறுவனத்தின் தலைவர் ஒவ்வொருவரையும் விதை நட்ட மண் சாடியோடு வர சொல்கிறார். முதலில் ஒருவர் பூcசெடி ஒன்றுடன் வந்தார். இன்னொருவர் தக்காளிச் செடியோடு வந்தார். இப்படி அந்த நிறுவனத்தில் உள்ள எல்லாருமே ஒவ்வொரு வகை செடிகளோடு வந்து நின்றனர். ஆனால் ஒருவன் மட்டும் மண் சாடியில் அந்த செடியும் இல்லது வந்து நின்றான். அவனை பார்த்து எல்லோரும் சிரிக்கின்றனர். தலைவர் அவரது இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவனிடம் ” ஏன் தம்பி உன்னுடைய சாடியில் செடி எதுவும் வளரவில்லையா? என கேட்டார். “இல்லை, நான் நீங்கள் கூறியதைப் போல் தண்ணீர் எல்லாம் ஊற்றி தான் பராமரித்தேன் இருப்பினும் செடியேதும் வளரவில்லை” என்றான். அப்போது அந்த தலைவர் அடுத்த தலைவரை அறிவிக்க தயாராகிறார். அனைவரும் பதற்றத்தில் இருந்தனர்..
” உங்களில் யார் அடுத்த தலைவர் என கூற வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் கொடுத்த விதை வளரக்கூடியது அல்ல, ஆனால் போட்டியில் வெல்வதற்காக பொய்யாக ஒரு செடியை கொண்டு வந்துள்ளீர்கள், ஆனால் ஒருவன் மட்டுமே நேர்மையாக இப் போட்டியில் கலந்து கொண்டுள்ளான். எனவே நீங்கள் அனைவரும் இன்றே இந்த நிறுவனத்திலிருந்து வெளியேறுங்கள். நேர்மையற்ற எவருக்கும் இங்கு இடமில்லை.” என்றார்.
உண்மையிலே நேர்மையாக வாழ்ந்து பாருங்கள், வெற்றி நம்மை தேடி வரும். நேர்மை, வெல்வதற்கு நேர தாமதமாகலாம். ஆனால், எப்போதும் தோற்காது.