தொழில்நுட்ப மாற்றத்துடன் ஒத்திசைதல்
– ஆதித்தன்
இன்றைய உலகத்தில், நிமிடத்திற்கு பல ஆயிரம் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும், நம்மில் எத்தனை பேர் தொழில்நுட்பங்களை எங்களுடைய அன்றாடச் செயற்பாடுகளுக்காக பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றோம் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.
தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதில் பலர் தயக்கம் அடைகின்றார்கள். இந்த தயக்கத்தின் பின்னால் இருப்பது எது என்பதை, பகுத்து ஆராயாமல் நாம் முன்னேறிச் செல்ல முடியாது. சௌகரியமான எல்லைக்குள்ளே தமது வாழ்க்கையை வகுத்துக் கொண்டவர்கள், முதலில் தம்மைச் சுற்றிய சூழல் மாறி வருவதை உணர்வதே இல்லை. திடீர் என ஒரு நாள், அதனை உணரும் போது, மாறிவிட்ட சூழலுக்கு ஏற்றவாறு உடனடியாக தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கு அவர்களால் முடியாமல் போகின்றது. தொழில்நுட்பம் சார்ந்த விடயத்திலும் இதுதான் நடக்கின்றது.
வரலாற்றுக் காலம் முதல் இன்றைய அதிநவீன யுகம் வரை, ஒவ்வொரு காலப்பகுதியையும் எடுத்து ஆராய்ந்தால், தொழில்நுட்ப மாற்றம் என்பது வெவ்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக நிகழ்ந்தே வந்துள்ளது. அம்மாற்றத்தை ஏற்றுக் கொண்டவர்கள் உயர்வை நோக்கி விரைவாக நகர்ந்தார்கள். மாற்றத்துடன் தம்மை இணைத்துக் கொள்ள முடியாதவர்கள் பின்தங்கிப் போனார்கள். வரலாற்றிலிருந்து நாம் கற்க வேண்டிய முக்கியமான பாடங்களுள் இதுவும் ஒன்று.
தகவல் தொழில்நுட்பம் ஆட்சி செய்யும் இன்றைய யுகத்தில், அனைத்துத் துறைகளுக்கு உள்ளேயும் அதன் ஆதிக்கம் மிக விரைவாகப் பரவிக் கொண்டு வருகின்றதை நாம் அவதானிக்கின்றோம். நாம் முக்கியத்துவம் அளிக்காத சிறு சிறு விடயங்கள் கூட தகவல்தொழில்நுட்பத்தினை உள்வாங்கிச் செயற்படுத்துகின்றன. வீதியின் ஓரத்தில் கடை வைத்தும் நடத்தும் சிறு வியாபாரி கூட, தனது வாடிக்கையாளர்களுக்கான வாட்ஸ்அப் குழுவொன்றை வைத்திருக்கின்றார். வீட்டிலிருந்தவாறே கேக் செய்து விற்பனை செய்யும் பெண் ஒருவரின் ஃபேஸ்புக் பக்கம் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்களால் நிமிடத்துக்கு நிமிடம் பார்வையிடப்படுகின்றது. தமது வியாபாரக் கணக்குவழக்குகளை தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தாமே செய்துகொள்ளும், பலர், விரைந்து முன்னேறிக் கொண்டு போகின்றனர். உண்மையில், தொழில்நுட்பம் பொருத்தமான முறையில் பிரயோகிக்கப்பட்டால், நமது வாழ்க்கையின் சிக்கல் தன்மை குறைக்கின்றது என்பதையே, நாம் உணர வேண்டும்.
நம்மைச் சுற்றிலும் தரவுகள் நிரம்பிக் கிடக்கின்றன. ஒவ்வொரு கணமும் புதுப்புதுத் தரவுகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை நமது தொழிலுக்கு அல்லது வணிகத்துக்கு நாம் எப்படிப் பயன்படுத்துவது என்று யோசிக்கும் மனநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்வி, சுகாதாரம், விவசாயம், போக்குவரத்து, பொழுதுபோக்கு, வர்த்தகம், கைத்தொழில், வங்கி முதலான சகல துறைகளும் தகவல்தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொண்டுவிட்டன. இதன்மூலம் பல தசாப்தங்களில் இடம்பெற வேண்டிய வளர்ச்சியை, அந்த துறைகள் சில மாதங்களில் அடைந்து வருகின்றன.
எப்போதும் கல்வித்துறையின் இரு பெரும் அம்சங்களாக இருப்பவை கற்றலும் கற்பித்தலும் ஆகும். தொழில்நுட்பம் தற்போது இந்த இரண்டு செயற்பாடுகளையும் எளிமையாக்கி விட்டது என்றே கூற வேண்டும். கடந்து போன கொரோனா பெருந்தொற்று காலத்தில், எங்கிருந்து வேண்டுமென்றாலும் இணைய வழியாக ஆசிரியரின் கற்பித்தலைப் பெற முடியும் என்ற புதிய சூழலை மாணவர்கள் எதிர் கொண்டார்கள்.
கரும்பலகை, சுண்ணாம்பு காலம் மங்கி, அதற்குப் பதிலாக ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், கணினிகள், இணையம் என பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள் களமிறங்கியுள்ளன. தொழில்நுட்பம் ஒவ்வொரு மாணவரின் கற்றல் தேவைகளுக்கு ஏற்ப தனிப் பயனாக்கப்பட்ட கற்றலை சாத்தியமாக்கியுள்ளது.
ஒரே வகுப்பறையில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஒரே வேகத்தில் கற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தங்களது வேகத்தில், தங்களுக்கு ஏற்ற முறையில் கற்க மாணவர்கள் இன்று வாய்ப்புப் பெற்றுள்ளனர். கடினமான கருத்துகளை விளக்குவதற்கு தொழில்நுட்பம் பல்வேறு வகையான காட்சிப்படுத்தல் கருவிகளை வழங்குகிறது. வீடியோக்கள், அனிமேஷன்கள், 3D மொடல்கள் போன்றவை மாணவர்களின் புரிதலை மேம்படுத்துகின்றன.
இணையத்தின் மூலம் மாணவர்கள் உலகின் எந்த மூலையிலிருந்து வேண்டுமானாலும் கற்கலாம். உலகின் சிறந்த ஆசிரியர்களின் பாடங்களை இணையத்தில் தேடிப்பார்த்து படித்துக் கொள்ள முடியும். தொழில்நுட்பம் ஆனது, ஆசிரியர் – மாணவர் மற்றும் மாணவர் – மாணவர் இடையேயான தொடர்பை, தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இணையநிலைக் கருத்தரங்குகள், இணையவழி உரையாடல் தளங்கள் போன்றவை மூலம் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை எளிதாக தெளிவுபடுத்திக் கொள்ள முடிகின்றது.
இன்னொரு பக்கத்தில், உலகின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உணவு உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகிறது. இதற்கு விவசாயத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானதாக உள்ளது. கடந்த சில தசாப்தங்களில், விவசாயம் ஆனது, தொழில்நுட்பம் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட துறையாக மாறிக்கொண்டு வருகிறது.
சென்சார்கள், ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் தரவுகளை சேகரித்து, மண்ணின் தன்மை, பயிர்களின் ஆரோக்கியம், வானிலை போன்றவற்றை துல்லியமாக கண்காணிக்க முடியும். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களுக்குத் தேவையான நீர், உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை துல்லியமாக வழங்க முடியும். இது உற்பத்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கை வளங்களை சிக்கனமாக பயன்படுத்துவதற்கும் உதவுகிறது.
தொழில்நுட்பத்தின் நவீன வருகைகளான தானியங்கி உழவுவாகனங்கள், களைக் கொல்லி விசிறிகள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் போன்றவை விவசாயிகளின் உடல் உழைப்பை குறைத்து, உற்பத்தித்திறனை அதிகரிக்கின்றன. இந்த இயந்திரங்கள் துல்லியமாக செயல்பட்டு, குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைச் செய்யும் திறன் கொண்டவை. விவசாயிகளுக்கான ஸ்மார்ட்தொலைபேசி செயலிகள் வானிலை முன்னறிவிப்பு, சந்தை விலைகள், பயிர் முகாமைத்துவம் குறித்த தகவல்களை துல்லியமாக வழங்குகின்றன. இது விவசாயிகளுக்கு சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது. ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் ஏரோபோனிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் சில பயிர்வளர்ப்புகளுக்கு இனி மண்ணே தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி விட்டன.
மருத்துவத் துறையில் தொழில்நுட்பம் புகுந்துள்ள விதம் மிகவும் வியக்கத்தக்கது. கடந்த சில தசாப்தங்களில், நோய்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றில் இந்த தொழில்நுட்பம் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன கால மருத்துவம், தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகவும் துல்லியமானதாகவும், தனிநபர் சார்ந்ததாகவும், செயல்திறன் மிக்கதாகவும் மாறி வருகிறது.
எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற உள்ளுறுப்பு சார் படப்பிடிப்பு தொழில்நுட்பங்கள் உடலின் உட்பாகங்களை துல்லியமாக படம் பிடித்து, நோய்களை கண்டறிய உதவுகின்றன. மரபணு பரிசோதனையின் மூலம் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் மற்றும் தனிநபருக்கு ஏற்ற மருந்துகள் பற்றிய தகவல்களை பெற முடிகின்றது. மருத்துவத்தில் தற்போது அறிமுகமாகியுள்ள ரோபாட்டிக் தொழில்நுட்பம் மூலம் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை துல்லியமாகவும் குறைந்த இரத்தப்போக்குடனும் மேற்கொள்ள முடியும்.
கடந்த சில தசாப்தங்களில், தொழில்நுட்பம் வர்த்தக முறைகளை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. இன்று, வணிகம் என்பது தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு துறையாக மாறிவிட்டது. இணையம் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கி விற்கும் முறை இன்று மிகவும் பிரபலமாகிவிட்டது. இதன் மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தும் வணிகம் செய்ய முடியும். ஸ்மார்ட்போன்கள் மூலம் பொருட்களை வாங்குவது இன்று மிகவும் எளிதாகிவிட்டது. அப் என்று சொல்லப்படும் செயலிகள் மற்றும் இணையதளங்கள் மூலம் எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தாலும் பொருட்களை வாங்கலாம் என்ற நிலையை அவதானிக்கின்றோம். இவை அனைத்துக்கும் மேலாக, சமீபகாலத்தில் வெளிவந்த ‘செயற்கை நுண்ணறிவுத்’ தொழில்நுட்பம் சர்வதேச ரீதியில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியாக ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பங்கள் உள்வாங்கப்பட்டுக் கொண்டு உள்ளன. நமது துறைகளுக்கான புதிய தொழில்நுட்பங்களை நாம் வெறுமனே அறிந்து வைத்திருப்பது கூட தற்போதைய இயந்திரமய உலகத்திற்கு போதாது. அவற்றைப் பயன்படுத்தத் தெரிந்து வைத்திருப்பவரையே நிறுவனங்கள் விரும்புகின்றன. அத்தகைய திறமையாளர்களுக்கே புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. புதிய கதவுகள் திறக்கின்றன. சவால்களை எதிர்கொள்ளத் துணிந்தவர்களுக்கு தொழில்நுட்பங்கள் எப்போதும் துணை செய்யக் காத்திருக்கின்றன.