கனடாவில் தமிழ் பாரம்பரிய மாதம்
கனடாவில் ஒவ்வொரு ஜனவரியும் தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த மாதம் தமிழ் மக்களின் வரலாறு, மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றை கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வாழும் தமிழ் மக்கள் தங்களின் பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் பாதுகாத்து வளர்த்தெடுக்க இந்த மாதம் ஒரு முக்கியமான தளமாக அமைகிறது.
உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் மக்களின் பிரதான பண்டிகையான தைப்பொங்கல் இம்மாதத்தில் வருவது, தமிழ் பாரம்பரிய மாதத்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கின்றது.
2014 ஆம் ஆண்டு ஒண்டாரியோ சட்டவாக்க சபையினால் தமிழ் பாரம்பரிய மாதம் பிரகடனப்படுத்தப்பட்டது.
தமிழ் பாரம்பரிய மாதத்தின் போது பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதில் கலை நிகழ்ச்சிகள், இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய நிகழ்வுகள் தமிழ் மக்களுக்கு தங்களின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மேலும், இது பல்லினங்களை உள்ளடக்கிய கனடிய சமூகத்திற்கு தமிழ் கலாசாரத்தை அறிமுகப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
தமிழ் பாரம்பரிய மாதம் கனடாவில் வாழும் தமிழ் மக்களின் அடையாளத்தை வலுப்படுத்துகிறது. இது அவர்களுக்கு தங்களின் பாரம்பரியத்தில் பெருமை கொள்ளவும், தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது கனடிய சமூகத்தில் தமிழ் மக்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் உதவுகிறது.
தமிழ் பாரம்பரிய மாதம் கனடாவில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து கனடியர்களுக்கும் ஒரு கலாசார பரிமாற்றத்திற்கான வாய்ப்பாக அமைகிறது. இது கனடாவின் பன்முக கலாச்சாரத்தை வளப்படுத்தவும், கனடா ஒரு பன்முக கலாச்சார நாடாக திகழவும் உதவுகிறது.