முயற்சி செய் !!
-சஸ்மிதா இளஞ்செழியன்-
பெரும்பாலும் நாம் எதையுமே செய்து பார்ப்பதற்கு முன்னே முடியாது என சொல்லி, தொடர முதலே முற்றுப்புள்ளி வைக்கிறோம். இது இன்றைய சிறார்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது.
முடியாது என்பது நமது எண்ணம் மட்டுமே, உண்மையிலே ஒவ்வொருவரும் ஒரு வகை திறமையோடு தான் பிறந்துள்ளோம். நமக்கு அதை கண்டறிய தெரியவில்லை.
ஒரு அழகான தேனீக் கூட்டம் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது. தேனீ என்றாலே நமக்கு தெரியும் அவை மிகவும் சுறுசுறுப்பனவை, இருப்பினும் அந்த கூட்டத்தின் ராணியின் செல்ல பிள்ளை மட்டும் சற்று சுறுசுறுப்பின்றி இருக்கின்றது. இது ராணி தேனீக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அன்றொரு நாள் வழமை போல எல்லா தேனீகளும் தேனை சேகரிக்க செல்கின்றன. ஆனால் பிள்ளை தேனீ மட்டும் உறங்கிக்கொண்டிருக்க கோபமடைந்த ராணி தேனீ “நாங்கள் வருவதற்குள் நீ உனக்கான கூட்டை கட்டி இருக்க வேண்டும். இல்லையென்றால் உன்னை எங்களோடு வைத்துக்கொள்ள மாட்டோம். தனியாக தான் வாழ வேண்டும் ” என கூறி விட்டு தேன் குடிக்க பறந்துவிட்டது.
பிள்ளை தேனீயோ என்ன செய்வதென்றே அறியாது அங்கும் இங்கும் அலைகிறது. தன் கூட்டத்தில் மற்றவர்கள் கட்டிய கூட்டை சென்று பார்க்கிறது, மிகவும் அழகாக உள்ளது என தனக்குள்ளே யோசித்து கொண்டு தானும் கூட்டை கட்ட ஆரம்பிக்கிறது. தேனை உருட்டி கூட்டை கட்டுகிறது எனினும் அந்த கூடு உடைகிறது, வலுவாக நிற்கவில்லை. மறுமுறை கட்டுகிறது கூடு வலுவாக நிற்கவில்லை, பல முறை முயற்சித்தும் தோல்வியுற்றதால் இனி முயற்சிக்க விருப்பமில்லாமல், களைப்படைந்த தேனீ தனது சிறகை வேகமாக அடித்து களைப்பை போக்கிகொண்டே இளைப்பாறியது. அப்போது எதேச்சையாக திரும்பிப்பார்த்த தேனீ மிகுந்த ஆச்சர்யத்தில் உறைந்தது. தனது செட்டையை வேகமாக அடிப்பதன் மூலம் அந்த கூடு வலுவடைகிறது என்பதை அந்த தேனீ அறிந்து கொண்டது. தொடர்ந்து விடாது முயற்சி செய்து ஒரு பெரிய தேனீ கூட்டை கட்டி வைத்தது.
அதாவது பல முயற்சிகள் தோற்கலாம், ஆனால் விடா முயற்சி செய்தால் தோல்வியே நம்மை கண்டு மிரண்டு வெற்றியை வாரி வழங்கிவிடும்.