மாரிமுத்தாப்பிள்ளை: தமிழ் இசையிலும் இலக்கியத்திலும் ஒரு முன்னோடி

Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
  • User AvatarMozhi
  • 11 Jun, 2025
  • 0 Comments
  • 0 Secs Read

மாரிமுத்தாப்பிள்ளை: தமிழ் இசையிலும் இலக்கியத்திலும் ஒரு முன்னோடி

தமிழ்நாட்டின் சிதம்பரத்துக்கு அருகிலுள்ள தில்லைவிடங்கன் என்னும் சிற்றூரில் கி.பி. 1712 இல், பிறந்தார் மாரிமுத்தாப்பிள்ளை. இளமையிலேயே சிறந்த கல்விமானாகத் திகழ்ந்த அவர், சிவகங்கநாத தேசிகர் என்பவரிடம் முறையாகத் தமிழ்க் கல்வியையும், சமயக் கல்வியையும் கற்றுத் தேர்ந்தார். தக்க குருவிடம் சமய நெறிமுறைகளையும், தீட்சையையும் பெற்று ஆன்மிகத்திலும் சிறந்து விளங்கினார்.

மாரிமுத்தாப்பிள்ளைக்கு இளமையிலேயே நல்ல இசையறிவு வாய்க்கப் பெற்றிருந்தது. சமகாலத்தவரான புகழ்பெற்ற சீர்காழி அருணாசலக் கவிராயரைக் கண்டும், கேட்டும், அவரோடு பழகியும் தம் புலமைக்கு மெருகேற்றிக் கொண்டார். அதுமட்டுமல்லாது, சிதம்பரத்தில் வாழ்ந்த வீணை அப்பாக்கண்ணுப்பிள்ளை, நாதசுரம் அரங்க நாதப்பிள்ளை, சின்னையாப்பிள்ளை பரம்பரையினர் போன்ற இசை மேதைகளுடன் பழகித் தம் இசை அறிவையும், இசைத் திறனையும் மென்மேலும் வளர்த்துக் கொண்டார். அவர்களைப் போலவே திறம்பட இசை பாட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டார்.

தில்லையம்பலவாணரான தம் இறைவனைத் துதித்துப் பாடுவதையே கடமையாகக் கொண்ட மாரிமுத்தாப்பிள்ளை, “புலியூர் வெண்பா”, “சிதம்பரேசர் விறலிவிடு தூது”, “தில்லைப்பள்ளு வண்ணம்”, மேலும் பல பதிகங்களையும் இயற்றினார். இவை தவிர, “வருணாபுரி”, “ஆதிமுலீசர் குறவஞ்சி”, “ஆதிமுலீசர் நொண்டி நாடகம்”, “அநீதி நாடகம்”, “புலியூர் சிங்காரவேலர் பதிகம்”, “விடங்கேசர் பதிகம்” போன்ற சிறந்த இலக்கியங்களையும், “இரதபந்தம்”, “நாகபந்தம்” போன்ற சித்திரக் கவிகளையும் படைத்து பெரும் புகழ் பெற்றார்.

மாரிமுத்தாப்பிள்ளை இயற்றிய இசைப்பாடல்களை இசைவாணர்கள் “செல்பதம்” என்று போற்றுவர். இவரது பாடல்கள் பல்லவி, அநுபல்லவி, சரணம் எனும் உறுப்புகளைக் கொண்ட கீர்த்தனை முறையிலேயே அமைந்துள்ளன. இகழ்வது போலப் புகழும் வஞ்சப்புகழ்ச்சி முறை இவரது கீர்த்தனைகளின் தனித்தன்மை எனலாம். மேலும், கீர்த்தனைப் பாடல்கள் முறையை முதன் முதலில் அமைத்த பெருமை மாரிமுத்தாப்பிள்ளை அவர்களையே சாரும்.

இவர் நூற்றுக்கணக்கான கீர்த்தனைகளைப் பாடியிருந்தாலும், இன்று நமக்குக் கிடைப்பவை 25 கீர்த்தனைகள் மட்டுமே. சீர்காழி பிடில் நாராயணசாமி என்பவர் மூலம் மாரிமுத்தாப்பிள்ளை அவர்களின் சில கீர்த்தனைகள் கிடைத்தன. அவற்றைப் பெற்ற திருப்பாம்புரம் டி.என்.சாமிநாதபிள்ளை, பரம்பரை பரம்பரையாகப் பாடப்பட்ட வர்ண மெட்டுக்களின் அடிப்படையிலேயே அவற்றுக்கு இசையமைத்து இசை உலகிற்குத் தந்தார்.

மாரிமுத்தாப்பிள்ளை பல இலக்கிய நூல்களை இயற்றியிருந்தாலும், அவரது புகழ் இன்று வரை நிலைத்திருப்பது அவர் தம் இசைப்பாடல்களால்தான். இன்றைய இசை நிகழ்ச்சிகளிலும், பரத நாட்டிய நிகழ்ச்சிகளிலும் மாரிமுத்தாப்பிள்ளையின் பாடல்களான,

  • “எந்நேரமும் ஒரு காலைத் தூக்கி”
  • “காலைத் தூக்கி நின்றாடுந் தெய்வமே”
  • “என்ன பிழைப்புன்றன் பிழைப்பையா”
  • “வீடும் அம்பலமாகி நீரும் அந்தரமானீர்”

போன்ற கீர்த்தனைகள் மிகச் சிறப்பாகப் பாடப்பட்டு வருகின்றன.

இவரது கீர்த்தனைகள் ஏசல் முறையில் அமைந்து, இசைத்தமிழ் உலகுக்கு ஒரு புதுமையான இலக்கியமாகக் கிடைத்தன. இது இசைத்தமிழ் உலகம் பெற்ற பெரும் பேறாகும். இந்த தமிழிசை விற்பன்னர் இப்பூவுலகில் 75 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X