பிரம்மாண்டமான சோழப்பேரரசு நிர்வகிக்கப்பட்டது எப்படி?

Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
  • User AvatarMozhi
  • 12 Nov, 2024
  • 0 Comments
  • 2 Secs Read

பிரம்மாண்டமான சோழப்பேரரசு நிர்வகிக்கப்பட்டது எப்படி?

– ஆதித்தன்

சோழர்களின்  கடல்போல பரந்த சாம்ராஜ்ஜியம் கால வெள்ளத்தால் அழிக்கப்பட்டுவிட்டாலும், அதன் எல்லையற்ற புகழ் அழிவற்று விளங்குகின்றது. அவர்களுடைய ஆளுகையின் பல அம்சங்களைக் கூர்ந்து நோக்கும்போது பிரமிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க இயலாத காரியம். அவற்றுள் ஒன்றுதான் சோழர்களின் அரச நிர்வாக முறைமை!

பிற்காலச் சோழர்களின் காலத்தில் தென்னாசியா மற்றும் தென்கிழக்காசியா வரை விரிந்த பேரரசில், மத்திய அரசாங்கம் என்ற அமைப்பு பெரிதும் பலம் வாய்ந்ததாக இருந்தது. அது சோழ மன்னரின் நேரடிப் பார்வையில் இயங்கியது. சோழப் பேரரசின் நிருவாகத் தலைமைப் பதவி அரசருக்கே உரித்தாக இருந்தது.

தஞ்சை, பழையாறை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய நகரங்கள் காலத்துக்குக் காலம் சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரங்களாக விளங்கின. மேலும் நிருவாகத்தைச் செம்மையாகவும், நேர்த்தியாகவும் செய்ய வேண்டும் என்பதற்காகத் திருவாரூர், சிதம்பரம், காஞ்சிபுரம் முதலிய நகரங்கள் சோழ அரசின் துணைத் தலைநகரங்களாக இயங்கி வந்தன.

பிற பிராந்தியங்கள் மீது படையெடுத்து வெற்றி கொண்ட சோழர்கள், அந்த இடங்களையெல்லாம் சோழப்பேரரசின் ஆளுகைக்கு உட்படுத்தி, தமது அதிகார எல்லையை விரிவாக்கினர். ஒரு எல்லைக்குமேல் விரிவடைந்த அந்த பாரிய சாம்ராஜ்ஜியத்தை, மத்திய அரசாங்கம் என்ற முறைமையை மட்டும் வைத்து நடத்துவது சாத்தியம் இல்லாமல் போயிற்று. அதனையடுத்து, சோழப்பேரரசை மண்டலங்களாகப் பிரித்து ஆள்கின்ற முறைமை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை பின்வருமாறு:

  1. சோழ மண்டலம் – சோழ நாடு
  2. இராசராசப் பாண்டி மண்டலம் – பாண்டிய நாடு
  3. செயங்கொண்ட சோழ மண்டலம் – தொண்டைநாடு (பல்லவ நாடு)
  4. மும்முடிச் சோழ மண்டலம் – இலங்கை
  5. முடி கொண்ட சோழ மண்டலம் – கங்கபாடி
  6. நிகரிலிச் சோழ மண்டலம் – நுளம்பபாடி
  7. அதிராசராச மண்டலம் – கொங்கு நாடு
  8. மலை மண்டலம் – சேர நாடு
  9. வேங்கை மண்டலம் – கீழைச்சாளுக்கிய நாடு (வேங்கி நாடு)

இவற்றுள் சோழ மண்டலம் நேரடியான சோழ அரச ஆளுகையின் கீழ் இருந்து வந்தது. ஏனைய மண்டலங்களுக்கு சோழ இளவரசர்கள் அல்லது சோழ அரசருடைய உறவினர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். அந்த ஆளுநர்கள் சோழ அரசருடைய குறித்த பிராந்தியத்துக்கான பிரதிநிதிகளாகச் செயற்பட்டனர்.  மண்டலத்தில் அமைதி காப்பது, அங்குள்ள பிரச்சனைகளை மத்திய அரசிற்கு எடுத்துக் கூறுவது, மத்திய அரசின் ஆணைகளைச் செயல்படுத்துவது ஆகியவை ஆளுநர்களின் பணிகளாக இருந்தன.

ஒரு மண்டலம் பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. ஒரு வளநாடு பல நாடுகளாகவும், நாடு பல கூற்றங்கள் அல்லது கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கோட்டமும் தன்னாட்சி பெற்ற பல ஊர்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. ஊராட்சி முறை பிற்காலச் சோழர் காலத்தில் மிகவும் சிறப்புற்று விளங்கியது.

பாதுகாப்பு, உள்நாட்டு அமைதி, குடிமக்கள் முன்னேற்றம், கோயில் பணி, பண்பாட்டு வளர்ச்சி போன்ற விடயங்களை சோழ மத்திய அரசு கவனித்த நிலையில், அவை தவிர்ந்த பெரும்பாலான பிற விடயங்களின் அதிகாரம் ஊர்களை நிர்வகிக்கும் சபைகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இரு ஊர்ச் சபைகளுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்பட்டபோது மட்டுமே மத்திய அரசு ஊர் நிருவாகத்தில் தலையிட்டது.

ஊராட்சி நடத்திவந்த சபைகளின் கடமைகளை சீராக முன்னெடுப்பதற்காக, ’வாரியங்கள்’ அமைக்கப்பட்டன. சம்வத்சர வாரியம், ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம் எனப் பல வாரியங்கள் அக்காலத்தில் இருந்தன. அறங்களை ஏற்று நடத்தல், அற நிலையங்களைக் கண்காணித்தல், ஊர் மக்கள் கொண்டு வந்த வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறுதல் போன்றவை சம்வத்சர வாரியத்தின் கடமைகள் ஆகும். ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளைப் பாதுகாத்தலும், விளைநிலங்களுக்கு வேண்டிய நீரை முறையாகப் பாய்ச்சுதலும் ஏரிவாரித்தின் கடமைகளாக இருந்தன. ஊரார் செலுத்த வேண்டிய நில வரியையும், பிற வரிகளையும் வசூலித்து அரசுக்கு ஆண்டுதோறும் அனுப்பிவைக்க வேண்டியது பஞ்சவார வாரியத்தின் கடமை ஆகும். இவை மட்டுமல்லாமல் தடிவழி வாரியம், கழனி வாரியம், கணக்கு வாரியம் என்பன போன்ற வேறுபல வாரியங்களும் இருந்தன.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், இந்த வாரியங்களுக்கான உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் முறை ஊடாகவே தெரிவு செய்யப்பட்டனர். அந்த தேர்தல் முறை அக்காலத்தில் ‘குடவோலை’ முறை என்று அழைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள உத்திரமேரூர்  பிற்காலச் சோழர் காலத்தில் ஒரு சிறிய ஊராக விளங்கியது. இவ்வூரில் உள்ள வைகுந்தப் பெருமாள் கோவிலின் கற்சுவரில் ஒரு பெரிய கல்வெட்டுக் காணப்படுகின்றது. இது உத்திரமேரூர்க் கல்வெட்டு எனப்படுகிறது. இக்கல்வெட்டு முதலாம் பராந்தகனின் பதினான்காம் ஆட்சியாண்டில் (கி.பி. 920இல்) அவனது ஆணைப்படி செதுக்கப்பட்டது ஆகும். இக்கல்வெட்டு, பிற்காலச் சோழர் காலத்தில் உத்திரமேரூரில் இருந்த ஊர்ச் சபைக்கு நடந்த குடவோலை தேர்தல் முறையைப் பற்றிய விரிவான செய்திகளைத் தருகின்றது.

உத்திரமேரூர் ஊர்ச் சபையில் உறுப்பினர்களாவதற்குத் தகுதி உடையோர், தகுதி இல்லாதோர் பற்றியும், தகுதி உடையோரில் தேவையான உறுப்பினர்களைக் குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கும் முறை, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைப் பல்வேறு வாரியங்களுக்கு நியமிக்கும் முறை, அவர்களின் பதவிக்காலம் போன்றவை பற்றியும் உத்திரமேரூர்க் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

சோழப் பேரரசின் வருவாயில் பெரும்பகுதி நிலவரி மூலமாகக் கிடைத்தது. அந்த நிலவரி காணிக்கடன் என வழங்கப்பட்டது. முதலாம் இராசராசன் காலத்தில் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு வரியாக வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. நிலவரி வழங்கத் தவறியோரின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்பட்டன.

நிலவரி அல்லாத பிற வரிகள் குடிமை என்று கூறப்பட்டன. இவ்வரிகளும் அரசின் வருவாயைப் பெருக்கின. சுங்கவரியும் அவற்றுள் ஒன்றாகும். ஊர்க்கழஞ்சு என்ற வரி ஊரில் பொதுவாக வைக்கப் பெற்றிருந்த ஓர் எடையைப் பற்றிய வரி ஆகும். மீன் பாட்டம் என்பது மீன் பிடிக்கும் உரிமைக்கான வரி. தசபந்தம் என்பது குளம் முதலிய நீர் நிலைக்கான வரி, முத்தாவணம் என்பது அந்நாளில் உள்ள விற்பனை வரி. வேலிக்காசு என்பது ஒரு வேலி நிலத்துக்கு இவ்வளவு என்று வசூலிக்கப்பட்ட வரி. மேலும் நாடாட்சி, ஊராட்சி, வட்டி நாழி, பிடா நாழி அல்லது புதா நாழி, வண்ணாரப் பாறை, குசக்காணம், நீர்க்கூலி, தறிப்புடவை, தரகு அல்லது தரகு பாட்டம் போன்ற எண்ணற்ற வரிகள் தேச நிர்வாகத்துக்காகப் பெறப்பட்டன.

நீதி வழங்கும் பொறுப்பானது ஊர்ச்சபையினரிடமும், குலப் பெரிய தனக்காரிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வழக்குகளை விசாரிக்கவும், தீர்ப்பு வழங்கவும் விதிகளும், முறைகளும் வகுக்கப்பட்டிருந்தன. காரணத்தான் துணையுடன் நீதி மன்றங்கள் செயல்பட்டன.

குற்றங்களுக்குத் தண்டனையாகக் குற்றவாளியின் உடைமைகளைப் பறிமுதல் செய்வதைத்தான் அவை முறையாகக் கொண்டிருந்தன. திருட்டு, பொய்க் கையொப்பம், விபசாரம் ஆகியவை கொடுங்குற்றங்களாகக் கருதப்பட்டன. இக்குற்றங்களைப் புரிந்து தண்டனை பெற்றவர்கள் ஊராட்சி அவைகளில் உறுப்பினராக அமரும் தகுதியை இழந்து விடுவார்கள். தெரிந்தோ தெரியாமலோ செய்த சில குற்றங்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதில்லை. குற்றவாளிகள் கோயில்களுக்கோ அன்றி மடங்களுக்கோ இவ்வளவு தானம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

அதிகாரம் பகிரப்பட்ட நிலையே, சோழ சாம்ராஜ்ஜியம் பல நூற்றாண்டுகளுக்கு உறுதியாக நிலைத்து நிற்பதற்கு பேருதவி புரிந்தது என்பதை, நாம் இதன்மூலம் அறிய முடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X