நடுகல் வழிபாடு: பண்டைய தமிழர் வீரத்தின் அழியாச் சான்றுகள்
பண்டைய தமிழர்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் இவ்வுலகுக்கு உணர்த்தும் மிக முக்கியமான சான்றுகளில் நடுகற்களின் பங்கு அளப்பரியது. தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பல இடங்களில் நடுகற்கள் கண்டறியப்பட்டு, அவை குறித்து விரிவான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நடுகல் என்பது வெறும் கல் அல்ல; அது தமிழர்களின் பண்பாட்டின் வெளிப்பாடு, அவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை, நன்றி பாராட்டல், மற்றும் வீரர்களுக்கான ஒருவித வெகுமதியும்கூட. அறக்கோட்பாடுகளுக்குச் சான்றாக விளங்குவதிலும் நடுகல் வழிபாடு ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.
சங்க இலக்கியங்களில் நடுகல் பண்பாடு
இந்தக் கற்கள் ‘வீரன்கல்’, ‘வீரக்கல்’, ‘நடுகல்’ என்றும் ‘நினைவுத்தூண்’ என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. வீரயுகக் காலம் என்று அறியப்படும் காலகட்டங்களில் நடந்த போர்களில், எதிரிகளுடன் போராடி விழுப்புண்பட்டு மடியும் வீரனின் வீரத்தைப் போற்றும் வகையிலும், அவனது தியாகத்தை மதிக்கும் வகையிலும் ஒரு கல்லை நட்டு, அதனை வழிபடுவது தமிழரின் தொன்மையான மரபாக இருந்துள்ளதைச் சங்க இலக்கியங்கள் மூலம் நாம் அறிகிறோம்.
இதுவரை தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகற்கள் பெரும்பாலும் மக்கள் வாழ்ந்த அல்லது வாழும் ஊர்களுக்கு வெளியில்தான் உள்ளன. ஈமக்காடுகளிலும் நடுகற்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம், நடுகற்கள் அமைக்கப்பட்ட இடங்கள், வீரன் உயிர்நீத்த போர்க்களமாகவோ அல்லது அவன் புதைக்கப்பட்ட இடமாகவோ இருக்கலாம் என்று அனுமானிக்க முடிகிறது.
நடுகற்களின் குறிப்புகள் மற்றும் தொல்காப்பியரின் வரையறைகள்
நடுகற்களில் பெரும்பாலானவற்றில், வீரனின் உருவம், பெயர், மற்றும் அவன் செய்த வீரச் செயல்கள் குறித்த குறிப்புகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இலக்கியத் தரவுகளையும், நடுகற்களில் காணப்படும் உருவங்களையும், எழுத்துக்களையும் ஆய்வு செய்யும்போது, ஆநிரை கவரவோ , மீட்டவோ, கொடிய விலங்குகளுடன் போரிட்டோ, அல்லது தான் சார்ந்த சமூகத்திற்காகத் தன்னைத் தியாகம் செய்தோ இறக்கும் வீரர்களுக்கே நடுகல் எழுப்பப்பட்டுள்ளது என்பது புலப்படுகிறது.
நடுகல் அமைப்பதற்கான ஆறு நிலைகளைப் தொல்காப்பியர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அவை: காட்சி (நடுகல்லுக்குரிய கல்லைத் தேர்ந்து எடுத்தல்), கால்கோள் (கல்லை நடும் இடத்தைத் தேர்வு செய்து நாட்டல்), நீர்ப்படை (நடுகல்லை நீராட்டித் தூய்மை செய்தல்), நடுதல் (தேர்ந்தெடுத்த கல்லை நிலத்தில் நடுதல்), பெரும்படை (நடுகல்லுக்குப் பெரிய படையலிட்டு வழிபடுதல்), வாழ்த்தல் (நடுகல் வீரனை வாழ்த்திப் பாடுதல்) என்பனவாகும். இதன்மூலம், நடுகல் வழிபாடு தொல்காப்பியர் காலந்தொட்டே வழக்கத்தில் இருந்துள்ளதை அறியலாம்.
திருவள்ளுவரும் தனது திருக்குறளில், போரில் இறந்த பகைவர்கள் நடுகல்லாக நின்றதைக் குறிப்பிடுகிறார்:
“என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்ன முன்நின்று கல்நின் றவர்” (குறள் 771)
ஆகவே, நடுகல் மரபு ஒரு நீண்ட வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டது என்பதை உணர்கிறோம். இக்காலத்தில் ராணுவத்தில் பணிபுரியும் வீரர் ஒருவர் தீவிரவாதிகளுடனோ அல்லது அண்டை நாடுகளுடனோ ஏற்படும் சண்டைகளில் உயிர்நீத்தால், அரசு அவருக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பது போல, பண்டைக் காலத்தில் மக்கள் நடுகற்களை நட்டு, வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
மற்றொரு சங்கப் பாடல், வில்லாளர்களின் வீரத்தை நடுகற்களில் பொறித்ததைக் கூறுகிறது:
“விடுவாய்ச் செங்கனைக் கொடுவில் ஆடவர் நல்நிலை பொறித்த கல்” (அகநானூறு 131)
நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும்
கடவுள் குறித்த கோட்பாடுகளும், நம்பிக்கைகளும் வலுப்பெறாத காலகட்டங்களில், இனக்குழு மக்கள் நடுகற்களையே வழிபட்டு வந்தனர் என்பது தெளிவாகிறது. சங்ககாலச் சிற்றூர் மக்கள் நடுகல்லைப் போற்றி வணங்கியதை புறநானூற்றுப் பாடல்கள் மூலம் அறியலாம். தம் இனத்திற்காக உயிர்த் தியாகம் செய்த வீரனுக்குச் செய்யும் மரியாதையாகவும், நன்றி மறவாப் பண்பாகவும் இச்செயல் அமைந்திருந்தது.
புறநானூற்றின் ஒரு பாடல் நடுகல் வழிபாட்டின் சிறப்பை இப்படி விவரிக்கிறது:
“ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்ததென கல்லே பரவி அல்லது நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” (புறநானூறு 335)
நடுகல்லை மனிதன் என்று எண்ணிய யானை, அதைத் தன் காலால் உதைத்தபோது, நடுகல் சாயாமல், யானையின் கால் நகமே உடைந்தது போன்ற வீரச் செய்திகளும் உள்ளன. போர்க்களத்தில் விழுப்புண்பட்டோர் நடுகல் அருகே வந்து, தங்கள் புண்ணைக் கிழித்து உயிர் விடுவர் என்றும் கூறப்பட்டது. நடுகல்லை வணங்கினால் மழை பொழியும், அரசன் வெற்றி பெறுவான், பயிர் செழிக்கும் என்ற நம்பிக்கைகளும் அக்காலத்தில் மக்களிடையே நிலவின.
நடுகல்லில் இறந்த வீரனின் பெயரையும், அவன் செய்த வீரச் செயலையும் பொறிப்பார்கள். அக்கல்லுக்கு நீராட்டி, நெய் பூசி, வாசனைப் புகை காட்டி, விளக்கேற்றுவர். பூக்களால் தூவி, மாலைகள் சூட்டி, மயிற்பீலி சாத்தி, காப்பு நூல் கட்டுவர். ஆட்டுக்கிடாய்களைப் பலியிட்டு துடிப்பறை ஒலிப்பர். எண்ணெய்பூசி கள் படைப்பர். வில், வேல், வாள் போன்ற போர்க் கருவிகளால் அதனைச் சுற்றி வேலியமைப்பர். இச்செயல்கள் யாவும் நடைபெற்றதற்குக் காரணம், இறந்த வீரனின் சக்தி அக்கல்லில் நிலைத்திருப்பதாக மக்கள் நம்பினர்.
மற்றொரு சங்கப் பாடல், நடுகல்லில் செய்யப்படும் சடங்குகளைப் பதிவு செய்கிறது:
“பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு அணிமயிற் பீலிசூட்டி பெயர் பொறித்து இனி நட்டனரே கல்லும்….” (ஐங்குறுநூறு 352)
நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியும் இன்றைய வழக்குகளும்
இறந்த வீரனைப் புதைக்கும்போது, அவன் பயன்படுத்திய போர்க்கருவிகளையும், அன்றாடப் புழங்கு பொருட்களையும் புதைகுழியிலேயே வைத்துப் புதைத்தனர். அண்மையில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்ட நடுகற்களின் அருகே கிடைத்த கற்பதுக்கைகளும், அவற்றுள் கிடைத்த பல உலோகக் கருவிகள், மண்பாண்டங்கள், அணிகலன்களும் இச்செய்திகளை உறுதிப்படுத்துகின்றன. இறந்தவர்களின் நினைவும், அதுசார்ந்த நம்பிக்கையும் தங்களுக்கு ஆற்றலை வழங்கும் என்ற கருத்தின் அடிப்படையிலேயே மக்கள் நடுகல்லை வழிபட்டிருக்கக்கூடும்.
பிற்காலங்களில் நடுகல் வழிபாட்டில் ஆடு, கோழி வெட்டிப் பலியிடுவது வழக்கமானது. கல்லுக்குரிய வீரனுக்குப் பிடித்த உணவுகள் படைக்கப்பட்டு வழிபடப்பட்டன. இன்றைக்கும், கிறிஸ்தவ சமயத்தினரிடம் ‘நீத்தார் நினைவு நாள் வழிபாடு’ என்ற நிகழ்வு ஒவ்வொரு வருடமும் கடைப்பிடிக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு அவர்கள் விரும்பிய பண்டங்களை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் (கல்லறையில்) படைத்து, பூமாலை சூட்டி, நறுமணப் புகை காட்டி வழிபடும் வழக்கம் உள்ளது. இதற்கும் நடுகல் வழிபாட்டிற்கும் தொடர்பு உள்ளதை அறியமுடிகிறது.
சங்கப் பாடல் வரிகள் நடுகல் வீரனுக்கு விருப்பமான பண்டங்களைப் படையல் இட்டு வழிபட்டதை விவரிக்கின்றன:
“இல்அடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப் புடைநடு கல்லின் நாட்பலி ஊட்டி…” (புறநானூறு 329)
“நடுகல் பீலி சூட்டி நார் அரி சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ…” (புறநானூறு 260)
“நடுகல் பீலிசூட்டி துடுப்படுத்து தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்…” (புறநானூறு 306)
படைக்கப்பட்ட பண்டங்களை வீரனின் ஆவி ஏற்றுக்கொள்வதாகவும், அதனால் வெற்றியும் விரும்பியதும் கிட்டும் என்றும் மக்கள் நம்பியதை இதன்மூலம் அறிய முடிகிறது.
காலங்காலமாகத் தமிழர்களிடையே நிலவி வரும் மரபுகளும், நம்பிக்கைகளும் நம் பண்பாடுகளைப் பறைசாற்றுவனவாகும். அவற்றில் சில அதிகப்படியான கற்பனைகளையும், மூடநம்பிக்கைகளையும் கொண்டிருந்தாலும், அவை தமிழ்ப் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்தவை என்பதையும் நாம் உணர்தல் வேண்டும்.