தீபாவளி: சில இனங்களும் சில கதைகளும்
– ஆதித்தன்
இந்து மதத்தின் கோலாகலமும் கொண்டாட்டமும் மிக்க பண்டிகை எது என்றால், மறு பேச்சின்றி தீபாவளியைச் சொல்லிவிடலாம். இந்து மக்கள் வாழ்கின்ற புவியியல் பிரதேசத்துக்கு ஏற்ப, தீபாவளிக் கொண்டாட்டங்களும் சம்பிரதாயங்களும் வேறுபடுகின்றன. அதேபோல் அந்த கொண்டாட்டங்களின் பின்னால் இருக்கும் கதைகளும் வித்தியாசமாக இருக்கின்றன.
இந்தியாவின் கலைச்செழுமை மிக்க மாநிலமான மேற்கு வங்காளம், இந்த தீபாவளி காலத்தில் காளியை வழிபடுகின்றது. வங்காளிகள் மத்தியில் காளி வழிபாடு பொதுவாகவே பிரபல்யமானது. தீபாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் அங்கே, காளி பூஜை விமரிசையாக ஆற்றப்படுகின்றது. மேற்குவனஙகாளம் மட்டுமன்றி அதனைச் சூழவுள்ள இந்திய மாநிலங்களான ஒரிசா மற்றும் அஸ்ஸாம் முதலானவையும் தீபாவளியை காளியுடன் இணைத்துக் கொண்டாடுகின்றனர். அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரான கௌகாத்தி இக்கொண்டாட்டங்களில் களைகட்டும்.
வட இந்தியாவின் பிற பகுதிகளில், தீபாவளி பெரும்பாலும் இராமாயணத்துடனே இணைத்துப் பார்க்கப்படுகின்றது. இராவணனை வதம் செய்த இராமர் தன் மனைவி மற்றும் தம்பி இலக்குவனுடன் மீண்டும் அயோத்திக்குத் திரும்பிய நன்னாளாக தீபாவளி கருதப்படுகின்றது. துர்ச்சக்திகளையும் தீமைகளையும் விலக்கி நன்மையும் செழுமையும் பெருகுவதற்கான ஆரம்ப நாளாக தீபாவளியைக் கருதும் பெரும்பாலான வட இந்திய மக்கள், இராவணனின் பாரிய பொம்மை ஒன்றைச் உருவாக்கி, அதனை இராமர் அழிப்பதாகச் சித்திரிக்கும் காட்சிகளை அமைப்பதனூடாக, இந்நாளைக் கொண்டாடுகின்றனர்.
இந்து மதத்தில் மட்டுமன்றி, சமண மதத்திலும் தீபாவளி விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. சமணத்தின் இருபத்தி நான்காவது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர், தீபாவளி அன்று அதிகாலையிலேயே இவ்வுலக வாழ்வினை நீத்தார். அதேவேளை மகாவீரரின் தலைமைச் சீடரான கணாதரர் இதே நாளில் ஞானம் பெற்றார். இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பரவி வாழ்கின்ற சமண மக்கள், இந்த தீபாவளி நன்னாளை தீபங்கள் ஏற்றிக் கொண்டாடி வருகின்றனர். உயிர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தக் கூடாது என்னும் அவர்களுடைய மதக்கொள்கை காரணமாக, தீபாவளியில் சமணர்கள் பட்டாசு வெடிப்பது இல்லை.
இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வாழ்கின்ற இந்து மக்கள் மத்தியில், தீபாவளியானது கிருஷ்ணர் – நரகாசுரன் கதையுடன் தொடர்புடையதாகவே அமைகின்றது. பல கொடுமைகளைச் செய்த நரகாசுரனை கிருஷ்ணர் தனடு மனைவி சத்தியபாமாவைக் கொண்டு அழித்தார். இறக்கும் தறுவாயில் தனது தவறுகளை உணர்ந்த நரகாசுரன் தனது மறைவை மக்கள் தீபம் ஏற்றி நினைவு கூர வேண்டும் என்று கோரிய வரத்தை, கிருஷ்ணர் அவனுக்கு அளித்தார். இந்த கதையைப் பின்னணியாகக் கொண்டே இலங்கை, தமிழ்நாடு, ஆந்திரா முதலான இடங்களில் வாழும் இந்து மக்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
செழிப்பான வாழ்க்கை, ஒளி, ஆன்மீகம் ஆகிய மூன்றையும் ஒரு கோட்டில் இணைப்பதாக தீபாவளி அமைகின்றது. பல்வேறு இனத்தவர்களாலும் பலகதைப்பின்னணிகளை முன்னிறுத்தி அது கொண்டாடப்பட்டாலும் மனமகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் அது வலியுறுத்துகின்றது.