தமிழிசை மும்மூர்த்திகள்
– ஆதித்தன்
’தமிழிசை மூவர்’ அல்லது ’தமிழிசை மும்மூர்த்திகள்’ என்ற வார்த்தையை எங்கேயாவது காணக் கிடைப்பதே அரிதாகிப் போய்விட்டது. மக்கள் மத்தியில் திரையிசைப் பாடல்கள் செலுத்தும் ஆதிக்கம் மிகவும் வலுவானதாக இருக்கிறது. அது, மண்ணின் மரபார்ந்த இசையையும் அது சார்ந்த ரசனையையும் மக்கள் மனங்களில் இருந்து வெளியேற்றி விட்டது. கர்நாடக இசை பெரும்பாலும் தெலுங்கு முதலான பிறமொழிகளுக்கு முன்னுரிமை தருவதாக அமைந்தமைக்குப் பின்னால், பல காரணங்கள் கூறப்படுகின்றன.
இந்த நிலையில், நாம் செய்த புண்ணியத்தால் தமிழிலேயே பாட்டெழுதி, தமிழிலேயே பாடித் தமிழிசையை வளர்த்த அறிஞர்களும் நம்மிடையே இருந்தார்கள். அந்த நல்லோர்களாலேயே, இன்றும் தமிழிசை ஓரளவாவது அறியப்படுகின்றது. அருணாச்சலக் கவிராயர், முத்துத் தாண்டவர் மற்றும் மாரிமுத்தாப்பிள்ளை முதலானோர் அவர்களுள் முக்கியமானவர்கள். இம்மூவருமே ’தமிழிசை மூவர்’ என்றும் ’தமிழிசை மும்மூர்த்திகள்’ என்றும் அறியப்படுகின்றனர்.
கர்நாடக இசையும் தனக்கென மும்மூர்த்திகளை வைத்துக் கொண்டுள்ளது. தியாகராசர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர் முதலான அவர்களை விடவும் ’தமிழிசை மும்மூர்த்திகள்’ காலத்தால் முற்பட்டவர்கள் என்பது பலருக்கும் தெரியாத விடயம்.
’கிருதி’ என்று அழைக்கப்படும் இசைவடிவத்தை உருவாக்கிய மூலவர்கள் வேறுயாருமல்ல; ’தமிழிசை மும்மூர்த்திகள்’ தான்! இன்று உள்ள பல்லவி, அனுபல்லவி, சரணம் அல்லது எடுப்பு, தொடுப்பு, முடிப்பு எனும் அமைப்பு இவர்களின் பாடல்களிலேயே காணக்கிடைக்கிறது.
1525 ஆம் ஆண்டில், பிறந்த முத்துத் தாண்டவர் சீர்காழியிலே வாழ்ந்து தமிழிசைப்பணி ஆற்றினார். தமிழிசையில் பாடல்கள் ஆனவை பண் உருவிலிருந்து இருந்து கிருதி வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தில், முத்துத்தாண்டவர் இருந்ததால், இந்த முன்னேற்றத்தில் அவருக்கும் பெரும் பங்கு உண்டெனச் சொல்லலாம். அனுபல்லவியை இணைத்து, பல்லவி-அநுபல்லவி-சரணம் என்கிற திரிதாது (திரி-மூன்று) முப்பிரிவு முறையை, தாளத்துக்கும் கதிக்கும் பொருந்தி முழுமைப்படுத்திக் கொடுத்தவர் முத்துத் தாண்டவரே! ‘கீர்த்தனை மரபின் பிதாமகர்’ எனவும் இவர் புகழப்படுகின்றார்.
1711 ஆம் ஆண்டளவில், தில்லையாடி என்னும் ஊரில் அருணாசலக் கவிராயர் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. இளமையில் கவிபாடும் புலமையும் பாடல்களை இசையுடன் பாடும் ஆற்றலும் பெற்றிருந்த இவருடைய படைப்புகளில் ’இராம நாடகக் கீர்த்தனை’ பெரும்புகழைப் பெற்றது. இந்த நூல் பல பதிப்புகளைக் கண்டது. தோடி, மோகனம், பைரவி, ஆனந்தபைரவி, சங்கராபரணம் ஆகிய இராகங்களில் அமைந்த, அருணாசலக் கவிராயருடைய கீர்த்தனைகள் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாயின. மங்களகைசிகம், சைந்தவி, துவிஜாவந்தி ஆகிய அபூர்வ இராகங்களிலும் இராமநாடகக் கீர்த்தனைகள் பாடப்பெற்றன. இக்கால இசைக் கச்சேரிகளிலும் நாட்டியக் கச்சேரிகளிலும் ஒரு சில இராம நாடகக் கீர்த்தனைகள் பாடப்பெறுகின்றன.
சிதம்பரத்திற்கு அருகிலுள்ள தில்லை விடங்கன் என்ற சிற்றூரில், 1712 ஆம் ஆண்டு, பிறந்தார் மாரிமுத்தாப் பிள்ளை. சிறு வயது முதலே, தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். இறை பக்தி இயற்கையாக ஏற்பட்டது. இவருடைய ‘தில்லைப் பள்ளு’ என்ற படைப்பு மிகவும் பிரபல்யமானது. மாரிமுத்தா பிள்ளையும் அருணாசலக் கவிராயரும் சம காலத்தவர்கள் ஆவர். மாரிமுத்தா பிள்ளையின் இசைப் பாடல்கள் பல இன்றும் கச்சேரி மேடைகளில் இசைக்கப்பட்டு வருகின்றன.
தமிழிசை மூவர்களாலேயே, நவீன காலத்திலும் தமிழிசை என்ற எண்ணக்கரு நிலைத்திருக்கின்றது என்று சொன்னால் அது மிகையில்லை.