தமிழர் புத்தாண்டு
-சஸ்மிதா இளஞ்செழியன்-
உலகின் பல நாடுகளிலும் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் சித்திரை மாதத்தின் முதல் நாளையே தங்கள் வருடத்தின் முதல் நாளாக கொண்டாடுகின்றனர். தமிழ் ஆண்டுக்கணக்கு சித்திரை மாதத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. தமிழர் வானியல் சூரியனின் போக்கினை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி தமிழ்நாட்காட்டி வான மண்டலத்தில் சூரியனின் அமைவை ஒட்டியே உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழர் சோதிடவியலில், பூமியை மையமாகக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள பிரபஞ்சவெளி 12 பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்பனவாகும். இந்த இராசிப்பிரிவுகளில் மீனத்தில் இருந்து மேஷத்துக்கு சூரியன் இடம் மாறும் அக்கணப்பொழுதிலேயே தமிழ்ப்புத்தாண்டு பிறக்கின்றது.
தமிழர்களின் வாழ்வியலில் இப்பண்டிகை மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. புத்தாண்டுக்கு முந்தைய நாட்களில் வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. அன்றைய தினம் அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.
இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகை நீர்க் கலவையை அனைவரும் தலையில் வைத்து நீராடுவது இன்றியமையாதது. அதைப்போலவே, இளையவர்கள் மூத்தவர்களை வணங்கி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் பெறுவதும் புத்தாண்டின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது. பசும் வெற்றிலையில் நெல்வைத்து பணம் வைத்து கைவிசேடம் வழங்கப்படுகின்றது. மேலும், போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.
தமிழ்ப்புத்தாண்டு வாழ்வுக்கும் வசிப்பிடத்துக்கும் புத்துணர்ச்சி ஊட்டுகின்றது. பிறக்கவுள்ள தமிழ்ப்புத்தாண்டினை அனைவரும் மகிழ்ச்சியாக வரவேற்றுக் கொண்டாடுவோம்.