சங்கக் கவிதை சொல்லும் காதல்
காதல், வீரம் ஆகிய இரண்டும் சங்க கால மக்களின் வாழ்க்கைமுறையில் பின்னிப்பிணைந்தே காணப்படுகின்றன. காலத்தைக்காட்டும் கண்ணாடியாகத் தொழிற்படும் சங்க இலக்கியங்கள் அவர்களுடைய காதல் வாழ்வைப் பிரதிபலிப்பதைக் காண்கின்றோம்,
நிலத்தின் தன்மைகளைக்கொண்டு அவர்கள் தங்கள் வாழிடத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாக வகுத்து, வாழ்ந்துவந்தார்கள். நிலத்தின் தன்மைகள், அவற்றின்மேலான தொழில், அவற்றின் மூலம் உண்டாகும் இயல்புகள் என்பன, அவர்களது காதல் வாழ்வில் தாக்கத்தை செலுத்தின.
பொதுவாகவே சங்க கால காதல் இலக்கியங்களுக்கு ஆழமான ஒரு வரையறை உண்டு. அந்த வரையறை உடைபட்டால் அது காதல் இலக்கியமாக (அகம்) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தம்முள் கூடும் இன்னம் இன்தென்று சொல்லாமை, பெயர்சுட்டாமை, ஒவ்வாத காதல், முரணான காதல்கள் (பொருந்தாக்காமம்) அகம் என்று கொள்ளப்படாது.
மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தில் உண்டான காதலை, கபிலர் அழகாக எடுத்துரைக்கின்றார். ஒரு பெண் காதலினால் படும் இன்பவலி இங்கு வெளிப்படுகின்றது:
“வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல்
சிறு கொட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே..”
”சிறிய ஒரு கிளையில் பாரம் தாங்காமல் தொங்கும் பெரிய பலாப்பழம்போல, வெளிப்பட்டு நிற்கும் இவளது காதல் மிகப்பெரியது, அனால் அதை தாங்கும் அளவுக்கு அவள் உயிர் பெரியதாகத் தெரியவில்லை. அது மிகச்சிறியது. இந்த வேதனையினையும் விரக தாபத்தையும் யார்தான் அறிவார்களோ? வேர்ப்பலாக்களுக்கு மூங்கில் வேலியிட்டு பாதுகாக்கும் மலைநாட்டின் தலைவனே!!” என, தலைவியின் காதல் பாரத்தை தலைவனுக்கு எடுத்துரைக்கிறது இக்கவிதை.
பாலைநிலத்து பெண் ஒருவள் விரகதாப உச்சத்தில் பிதற்றுவதாக, கொல்லன் அழிசி என்ற புலவன் செய்யுள் படைக்கின்றான்.
“கன்றும் உண்ணாது கலத்தினுள் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்தில் உக்கா அங்கு
எனக்கு அகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.”
”கன்றும் குடிக்காமல், பாத்திரத்திலும் கறக்காமல், நிலத்தில் வீணே வழிந்துபோகும் பசுவின் பாலைப்போல, எனக்கும் உதவாமல், என் தலைவனுக்கும் இல்லாமல் என் அழகும் விணாகிக்கொண்டிருக்கின்றதே” என்று அவளுடைய பிரிவுத்துயரை இக்கவி சிறப்புற வெளிப்படுத்துவதைக் காணலாம்.
காதல்வயப்பட்டவர்கள் முதலில் தொலைப்பது தங்கள் உறக்கத்தைத்தான்! நெய்தல் நிலப்பெண் காதல் வயப்பட்டு தூக்கம் தொலைத்து நின்ற உணர்வை பதுமனார் என்ற புலவர் இவ்வாறு எடுத்துரைக்கின்றார் சொல்கின்றார்:
“நள்ளென்றன்றே, யாமம் சொல் அவித்து,
இனிது அடங்கினரே, மாக்கள் முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மற்ற துஞ்சாதேனே”
”நள்ளிரவு நிசப்தம் நிலவுகின்றதே.. தமது சத்தங்களை எல்லாம் தொலைத்து மக்கள் தூங்குகின்றனரே! அடடா உலகமே தூங்குகின்றதே என்னைத்தவிர!” என்று, தான் மட்டும் வித்தியாசமாகிப் போனதை வியக்கிறாள் தலைவி.
சங்க இலக்கியங்கள் காதலர்களின் பல்வேறு உணர்வுகளை ஆழமாகவும் விரிவாகவும் சித்தரிக்கின்றன. இந்த உணர்வுகளைப் படிக்கும்போது, அக்கால காதலர்களின் வாழ்க்கை முறைகளையும், மன உணர்வுகளையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.