’கீழடி’க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
– ஆதித்தன்
கடந்த சில ஆண்டுகளில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் தொல்பொருள் ஆய்வாக, கீழடி அகழாய்வு விளங்கி வருகின்றது. ஏராளமான தொல்லியல் ஆய்வுகளை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். ஆனால், கீழடி இவ்வளவு பிரபல்யம் அடைந்தமைக்கான காரணம் என்ன? சுருக்கமாகச் சொல்வதானால், சங்க இலக்கியங்கள் காட்டிய பண்டைத் தமிழர் வாழ்வியலுக்கான நேரடி ஆதாரங்கள் கீழடி ஊடாக வெளிப்பட்டுள்ளன. சங்க கால நாகரிகத்தை வெறும் கட்டுக்கதை என்று சிலர் சொல்லி வந்த நிலையில், அது ‘கதையல்ல; நிஜம்’ என்பதை கீழடி வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.
தமிழகத்தின் மதுரையிலிருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க கீழடி கிராமம்! தமிழகத்தில் இன்றுவரை நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளிலேயே இதுவே மிகப்பெரிய அளவில் நடைபெறும் அகழாய்வாகும்.
சங்க இலக்கியப் பாடல்களில் காட்சிப்படுத்தப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருக்கின்றமை, ‘இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி’ என்ற கூற்றை மெய்ப்பித்திருக்கின்றது. சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள், இதுவரைக்கும் 600க்கும் அதிகமாகக் கிடைத்துள்ளன. முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லு, தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள், சிறுகுழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் என வாழ்வியற்சான்றுகள் தாராளமாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
மேலும், இங்கு கிடைத்துள்ள நூல் நூற்கும் கருவியானது, சங்ககால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருப்பதை உறுதி செய்கிறது. பட்டிணப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றமை முக்கியமாக கவனிக்க வேண்டியது. இக்கேணிகள், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அருகே அமைக்கப்பட்டிருக்கின்றன.
சங்ககாலத்தில் தமிழர்கள் அதிகளவில் செங்கல் வீடுகளில் வாழ்ந்தமையை இதன்மூலம் அறியக்கூடியதாக உள்ளது. அந்த வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும் இங்கு கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் உணர முடிகிறது.
கீழடியில் மட்டும் ஒரு டன் எடை அளவிற்கு கருப்பு சிவப்பு மட்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. பல ஓடுகளில் “தமிழ் பிராமி” எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்கள் தமிழர்களின் தனித்துவமான வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. குஜராத்தை சோ்ந்த சூது பவள மணிகளும், ரோமானிய நாட்டு அரிட்டைன் வகை மட்பாண்ட ஓடுகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. இதன்மூலம் சங்ககாலத் தமிழர்கள் இந்திய துணைக்கண்டத்திற்கு உள்ளாகவும் கடல்கடந்த நாடுகளிலும் கொண்டிருந்த வாணிக தொடா்பை உணர முடிகின்றது.
சங்ககாலத்தில் கட்டிடங்களே இல்லை எனச் சொல்லப்பட்டு வந்த எதிர்நிலை வாதங்களை, இந்த அகழாய்வு முறியடித்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்கள் மூலம் ஒரு நகர நாகரீகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் அங்கே கிடைத்துள்ளன.
கீழடியின் அகழ்வாய்வும் வெளிக்கொண்டுவரப்பட்ட பொருட்கள் மீதான ஆய்வுகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தமிழர் வரலாறும் தொன்மையும் ஆதாரபூர்வமான விரிவாக்கத்தை அடைந்து கொண்டிருக்கின்றன என்பதே சுட்டிக்காட்ட வேண்டியது.