ஆய்வுகளை ஆவணப்படுத்தல்: தமிழியலின் உடனடித் தேவை
– ஆதித்தன்
பல்வேறு ஆவணப்படுத்தற் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் ஆவணப்படுத்தல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கின்றது. எனினும், நூல்களை ஆவணப்படுத்தல் என்பதைத் தாண்டி, ஆவணவாக்கற் செயற்பாடு இன்னும் பலதளங்களுக்கு விரிவடையவேண்டிய தேவை உள்ளது. அவ்வாறான ஒரு தளமாக தமிழியல் ஆய்வுகளை ஆவணப்படுத்தல் செயற்பாடு உள்ளது.
தமிழியல் ஆய்வு எனப்படும் போது, அது தமிழ் மொழி மற்றும் இலக்கியம் ஆகிய பரப்புகளைத் தாண்டுகின்றது. தமிழுடன் தொடர்புபடும் பிற துறைகளான வரலாறு, புவியியல், கணிதம், சிற்பக்கலை, விஞ்ஞானம், நுண்கலைகள், வடிவமைப்பு, கட்டடக்கலை, கணினி விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் என பலதுறைகளையும் தமிழியல் என்ற விடயப்பரப்பு உள்ளடக்கி நிற்கின்றது. கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் அதிகமான காலப்பகுதியில் ஏராளமான தமிழியல் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. பெரும்பாலும் பல்கலைக்கழகங்களைச் சார்ந்தே இந்த ஆய்வுகள் இடம்பெற்றுள்ள போதிலும், தனிநபர்களாலும் சில அமைப்புகளாலும் கூட இவ்வாறான ஆய்வுச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இங்கு, உலகளாவிய ரீதியான பல்கலைக்கழகங்களில் செய்யப்படும் தமிழியல் ஆய்வுகள் சார்ந்த பிரச்சினைகளை முதலில் எடுத்து நோக்கலாம். அதிக எண்ணிக்கையான தமிழியல் ஆய்வுகளை முன்னெடுப்பதில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் முன்னிலை வகிக்கின்றது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் தமிழியல் ஆய்வுகள் இடம்பெறுகின்றன. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஏராளமான தமிழியல் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், ஜேர்மனி முதலான பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களிலும் தமிழியல் ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன. உலகின் பரந்துபட்ட நிலப்பரப்பில் தமிழியல் ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றமையை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழியல் ஆய்வுகள் முறையான ஆவணப்படுத்தற் செயற்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இதன் காரணமாக பல்வேறு இழப்புகளை சமூகம் சந்தித்துள்ளதுடன், பணம், நேரம், மனித சக்தி ஆகிய வளங்களும் தொடர்ச்சியாக வீணடிக்கப்படுகின்றன.
உரிய ஆவணமாக்கல் முறைமை இல்லாத காரணத்தினால், எந்த ஆய்வுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன என்பதை செம்மையாக அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது. தமிழ்நாட்டின் புவியியல் எல்லைக்கு உள்ளே உள்ள பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் கூட, முடிவுபெற்ற ஆய்வுகள் மற்றும் தற்போது நடைபெற்ற வண்ணம் உள்ள ஆய்வுகளும் முறையாக பொதுத்தளத்தில் ஆவணப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக மதுரையில் செய்யப்படும் ஒரு ஆய்வு குறித்து சென்னையில் உள்ள ஆய்வாளருக்கு தெரியாத நிலையே பெரும்பாலும் உள்ளது. இது ஓர் உதாரணம் மட்டுமே. இதைப்போலவே, தமிழ்நாட்டுக்கு வெளியே இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆற்றப்படும் தமிழியல் ஆய்வுகள் குறித்த தரவுகள் பெரும்பாலும் பொதுத்தளத்தில் இல்லை. உலகளாவிய ரீதியான பல்கலைக்கழகங்களில் நிகழ்த்தப்படும் தமிழியல் ஆய்வுகளின் நிலையும் இவ்வாறாகவே உள்ளது.
கட்டமைந்த நிறுவனமயப்பட்ட பல்கலைக்கழகங்களின் நிலையே இவ்வாறென்றால், தனிநபர்கள் மற்றும் பிற அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் ஆய்வுகள், பொதுவெளியில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. மிக முக்கியமான, தரம் மிக்க ஆய்வுகள் தனி நபர்களாலும் ஆய்வு சார் ஓர்மம் மிக்க அமைப்புகளாலும் செய்யப்பட்டிருப்பதை நாம் காண்கின்றோம். இந்நிலையில் இந்த ஆய்வுகளும் அவற்றின் முடிவுகளும் பொது ஆவணப்படுத்தலுக்கு உள்ளாகாமை வேதனைக்குரிய விடயமாகவே உள்ளது.
இந்த நிலை காரணமாக, ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுத்தலைப்புகளும் ஆய்வுப்பரப்புகளும் ஆய்வாளர்களால் மீள மீளத் தெரிவு செய்யப்படும் அவலம் இங்கு காணப்படுகின்றது. கணிசமான ஆய்வுக்கட்டுரைகளும் ஆய்வேடுகளும் ஒரே ஆய்வுத்தளத்தைத் தேர்ந்தெடுத்து ஒரே அணுகுமுறையூடாக நோக்கி, ஒரே மாதிரியான முடிவுகளை வெளிப்படுத்தும் நிலை மாற வேண்டும். பரந்து விரிந்துள்ள தமிழியல் துறையில் ஏராளமான பகுதிகள் ஆய்வினை வேண்டிக்கிடக்கின்றன. அரிய சுவடித்துறை முதலான சில பகுதிகளில் ஆய்வுச் செயற்பாடுகள் உடனடியாக நிகழ்த்தப்படாவிட்டால், மூல ஆதாரத் தரவுகள் அழிந்துபோகும் நிலையும் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட பரப்புகளிலேயே மீண்டும் மீண்டும் ஆய்வு நிகழ்த்திச் செல்லும் செயற்பாட்டினால், தமிழியலில் புதிய ஆய்வு முடிவுகளுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழியற் பெரும்பரப்பின் ஆய்வு இடைவெளிகளை அடையாளம் கண்டு, அவற்றை ஆய்வுலகிற்கு வெளிப்படுத்தியாக வேண்டிய நடவடிக்கையும் தேவைப்படுகின்றது. இது ஒருதடவை மட்டும் நிகழ்த்தப்படுவது பொருத்தமற்றது. தொடர்ச்சியாகவும் வேகமாகவும் மாற்றமடைந்துவரும் ஆய்வுச்சூழலில், ஆய்வு இடைவெளிகளை அடையாளம் காணுதல் என்பது காலத்திற்குக் காலம் நடைபெறவேண்டிய ஒன்றாக உள்ளது. இதன் மூலம் புதிய ஆய்வாளர்களின் கவனத்தை இந்த இடைவெளிகள் தம்மை நோக்கி ஈர்த்தல் இடம்பெறும். ஆய்வாளர்கள் தம் ஆய்வுகளுக்கு புதிய பரப்புகளையும் புதிய ஆய்வு முறைகளையும் தெரிவுசெய்ய முனையும் சாத்தியம் ஏற்படும்.
எனவே, தமிழியல் சார்ந்த எந்தவொரு விடயத்திலும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் எவை என்பதும் எஞ்சியிருக்கும் ஆய்வு இடைவெளிகள் எவை என்பதும் குறித்த தெளிவான புரிதல் எமக்கு ஏற்படவேண்டுமானால், தமிழியல் ஆய்வுகளை ஆவணப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுப்பது இன்றியமையாதது.
உலகின் பல நாடுகளிலும் நடைபெற்றுவரும் தமிழியல் ஆய்வுகளை ஆவணப்படுத்துவது எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வி இப்போது எழும்புதல் கூடும். இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இது சாத்தியமான ஒன்றே! ஆய்வாளர்களும் ஆய்வுத்துறைகளின் அதிகாரப் படிநிலையில் உள்ளவர்களும் மனம் வைக்க வேண்டும் என்ற ஒரு தடைக்கல்லே இங்கு காணப்படுகின்றது.
முதற்கட்டமாக, பிராந்திய ரீதியான ஆவணப்படுத்தலை முன்னெடுத்தலே பொருத்தமானது. உதாரணமாக, தமிழ்நாட்டை ஒரு பிராந்தியமாக கொண்டு முதலில் அங்கு நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் தொடர்பான தரவுகளைத் திரட்டி தரவகம் அமைத்தல் வேண்டும். மற்றொரு உதாரணமாக இலங்கையை தனி ஒரு பிராந்தியமாக கொண்டு, முன்பு குறிப்பிட்டதைப் போன்றே, தரவகம் அமைத்தல் வேண்டும். இவ்வாறே, பொருத்தமான முறையில் பிற பிராந்தியங்களைத் தெரிவு செய்து, அவற்றுக்கான தரவகங்களையும் அமைத்தல் வேண்டும். பின்பு அப் பிராந்தியத் தரவகங்களை இணைத்துக் கொள்ளலாம். இச்செயற்றிட்டத்தைச் செய்யப் புகுபவர், தனியொருவராக இதனைச் செய்து முடித்தல் இயலாத காரியம். குறித்த பிராந்தியங்களில் இச்செயற்றிட்டம் சார்ந்த ஆர்வமும் வல்லமையும் உள்ள அமைப்புகளை பங்காளர்களாக உள்வாங்கிக் கொள்வதன் மூலமே இதனை விரைந்து செய்து முடிக்கலாம். இதுபோன்ற பொருத்தமான திட்டங்களை வகுத்தலும் மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப அத்திட்டங்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருப்பதை உறுதிசெய்தலும் முக்கியமானவை.
எல்லாவற்றையும் விட, தற்போதைய சூழ்நிலையில் |தமிழியல் ஆய்வுகளை ஆவணப்படுத்தல்| குறித்த கருத்தாடல்களை துறைசார் அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மத்தியிலும் பொதுக்கருத்துத்தளத்திலும் ஏற்படுத்துவது மிக முக்கியமானது. அதுவே, இந்த நீண்ட பெரும் பயணத்துக்கான முதல் அடிச்சுவடாக தோற்றம் கொள்ளும்.