தன்னம்பிக்கை கொள் !!
-சஸ்மிதா இளஞ்செழியன்-
உலகம் ரொம்பவே வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் எதையோ நோக்கி பரபரப்பாக தன் பயணத்தை தொடர்கிறான். இருந்தும் ஏதோ இடத்தில் தடைப்படுகிறான்.
உங்களுக்கு இது போல நடந்ததுண்டா?? சற்று சிந்தித்துப் பாருங்கள்.. நாம் அனைவரும் ஒரு வழக்கத்திற்கு பழக்கப்பட்டிருக்கிறோம். நாம் செய்யும் அனைத்தையும் மற்றவர்கள் பாராட்ட வேண்டும். பாராட்டாத பட்சத்தில் நாம் ஏதோ தவறிழைத்தது போல நாமே ஒரு எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறோம். இது சரிதானா?
ஒரு நிறைந்த சபையில் பல மக்களின் முன்னிலையில் 20 வயது சிறுவனொருவனின் முதல் நகைச்சுவை பேச்சு நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.. முதல் முறை என்பதால் அந்த சிறுவனும் சற்று பயத்தில் தான் பேச்சை தொடங்குகிறான்.
பேசிக்கொண்டே சபையை பார்த்த சிறுவன் சற்று பதற்றம் அடைகிறான். பேச்சு தடுமாறுகிறது.. அவனின் தடுமாற்றத்திற்கு காரணம் என்னவென்று உங்களால் கூறலாமா?
முதல் தடவை என்ற பதற்றமா? இல்லை, அவன் சபையை பார்த்தப் போது அங்கு சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் கதைத்துக்கொண்டு இருந்தனர். இன்னும் சிலர் எழுந்து நடந்துக் கொண்டிருந்தனர்.
இதை கவனித்த சிறுவன் அவனுக்கு கொடுக்கப்பட்ட அந்த 30 நிமிடத்தை முடித்துவிட்டு ரொம்பவே கவலையில் சென்று அமர்கிறான். நாட்கள் கடந்தன..
இன்னொரு மேடை. அதே சிறுவன். ஆனால் இன்று அவன் சிறுவனல்ல, பல வெற்றிகளுக்கு சொந்தமான அனைவரினதும் விருப்பத்திற்குரியவன்.. இந்த மேடையிலும் இவன் பேசுகிறான்.
” என் முதல் மேடையில் என்னை யாருமே கவனிக்கவில்லை. நான் என்ன நினைத்தேன் என்றால், ஒரு வேளை நான் பேசுவது நன்றாக இல்லையா? அல்லது நான் எதும் பிழை செய்கிறேனா என யோசித்தேன் ஆனால் என் பேச்சை நிறுத்தவில்லை. என்றாவது அதே சபை என்னை கொண்டாடும் என நான் நம்பினேன். “தன்னம்பிக்கை” அதுவே என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ” என்றார்.
அதாவது நம்மை பாராட்டாத கூட்டத்தை கூட திரும்பிப்பார்க்க வைக்க முடியும் என்ற தன்னம்பிக்கை ஒருவனை உயரத்திற்கு கொண்டு செல்லும்.